சென்னை:ஆதிமனிதன் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஒரு நீளமான குச்சியைப் பயன்படுத்தினான். அந்த நீளமான குச்சி விலங்குகளிடமிருந்து அவர்களைக் காத்தது. பின்னர், அதுவே நாளடைவில் வேல் கம்பாக உருவெடுத்தது.
மன்னர்கள் போர்களில் அதிகமாக உபயோகித்த ஒரு ஆயுதம் வேல் கம்பு. வேல் கம்பின் அடிப்படை சிலம்பம் ஆகும். எதிரிகள் எவ்வாறு நம்மை தாக்குவார்கள், அவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து க்கொள்வது, பின்னர் அவர்களை நாம் எவ்வாறு தாக்குவது என்று பல பாடத்திட்டமாக சிலம்பம் உருவெடுத்தது.
தற்போது சிலம்பம் பல ஊர்களில் பல்வேறு விதமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென்தமிழகப் பகுதிகளான திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் சிலம்பம் வெவ்வேறு விதங்களில் பாடமுறைகள் அமைத்து சிறப்பாக கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
சிலம்பம் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தைக் குறிப்பிடுகிறார். திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர, கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன.
இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளை பயின்றதாகத் தெரிவிக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அருங்காட்சியகம்:சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகவும் தொன்மையானவை. கி.மு.2000க்கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், எகிப்தின் போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால், தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக் கலையும் பரவியதாக கருதப்படுகிறது.
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவரை கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்திலிருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பம் சுற்றுவதில் உள்ள வகைகள் என்ன?சிலம்பம் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது அவை, அலங்கார சிலம்பம், போர் சிலம்பம் மற்றும் போட்டி சிலம்பம் ஆகும்.
அலங்கார சிலம்பம்:பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்கும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் சுற்றக்கூடிய வகைதான் அலங்கார சிலம்பம். இதில் கம்புகளை வெவ்வேறு விதமாக அலங்கரித்து சிலம்பம் சுற்றுவார்கள். இதில் நட்சத்திர பந்தம், லட்டு, இரட்டைக் கம்பு, நெடுங்கம்பு அலங்காரம், கலர் ரிப்பன், பூங்கொத்து, சூரிய பந்தம் போன்ற எண்ணற்ற வகையிலான ஆயுதங்கள் உள்ளன. இந்த வகை சிலம்பம், பெரும்பாலும் கலை நிகழ்ச்சிகளில் சுற்றப்படுகிறது.
போர் சிலம்பம்:நம் முன்னோர்கள் போர்களில் பயன்படுத்திய பாட முறைகள் அனைத்தும் போர் சிலம்பம்தான். இந்த விளையாட்டு அவ்வளவு எளிதாக யாரும் விளையாடிவிட முடியாது. இந்த விளையாட்டு விளையாடுவதற்கு உடல் திறன் மிகவும் அவசியம்.
உடல் வலிமையாக இருக்க ஆரம்பத்தில் இருந்தே பல உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் எதிரே விளையாடும் நபருடன் தன்னுடைய முழு பலத்தையும் காட்ட வேண்டும். இல்லையெனில், எதிராளி நம்மை எளிதாக அடித்துவிடுவான். இந்த விளையாட்டு பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் வயது மூத்த ஆசான்களால் கற்பிக்கப்பட்டு வருகிறது.
போட்டி சிலம்பம்:'போட்டி சிலம்பம்' என்பதில் தனித்திறமை, தொடு முறை போட்டி என்று இரு வகைகள் உள்ளது. சிலம்ப போட்டி நடத்துபவர்கள் இந்த போட்டியை அடிப்படையாகக் கொண்டுதான் எப்போதும் போட்டிகள் நடத்துவர்.
தனித்திறமை என்பது தனக்குத் தெரிந்த பாடங்களை வேகமாகவும், நெளிவுசுளிவாகவும், தனக்கு முன் இருக்கும் நடுவர்களிடம் 1.30 நிமிடங்களுக்கு சுற்றி காண்பிக்க வேண்டும். தொடுமுறை போட்டியானது தனக்கு ஈடாக வயதும் எடையும் உள்ள வீரரிடம் 2 நிமிடங்கள் விளையாட வேண்டும். யார் அதிகமான புள்ளிகள் பெறுகிறார்களோ, அவர் தான் வெற்றியாளர்.
சிலம்பம் சுற்றுவதால் ஏற்படும் நன்மைகள்:சிலம்பம் சுற்றுவது நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நன்மை தரும். சிலம்பம் சுற்றுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு பிரச்னைகள் வருவதில்லை. உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் சிலம்பம் உதவுகிறது.
மேலும், தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்த சுகாதார நலன் பயிற்சி, பொறுமை, தசை வலிமை ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.
சிலம்பம் விளையாட்டில் சாதிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அளித்துள்ளது. இது மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும், கற்றுக் கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் எளிமையாக இருப்பதால், தமிழ்நாட்டின் பல பள்ளிக்கூடங்களில் உடற்கல்வியில் தற்போது சிலம்ப விளையாட்டை ஒரு பாடமாக சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க:புயல், சுனாமியை இப்படித்தான் கணிக்கிறார்கள்! - அதிசயிக்க வைக்கும் விஞ்ஞானிகள்!