சென்னை:திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவை பவள ஆண்டு விழாவாக வரும் செப்டம்பர் 17ஆம் தேதி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவரமாக நடைபெற்று வருகிறது.
திமுக வரலாற்றுச் சுவடுகள்: இந்திய குடியரசு தோன்றும்போது, திமுக கடந்த 1949ஆம் ஆண்டு அண்ணாதுரையால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கட்சி ஆகும். இக்கட்சி அடுத்த 15 ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றியது. அத்துடன், தேசிய கட்சி எதுவொன்றும் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலையை ஏற்படுத்தியது. இது தொடங்கி திமுக ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் தமிழ்நாட்டின் அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
கிராம வருவாய் நிர்வாகம்: கிராம வருவாய் நிர்வாகம், ஒரு அரசுப் பணியாளரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. கிராம அலுவலர் அக்கிராமத்திலிருந்த அதிகாரக் கட்டமைப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரிடம்தான் கிராமம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இருக்கும். அரசின் சார்பில் அவர்தான் கிராமத்தை நிர்வகிப்பார்.
குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம்: குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் மிகவும் வலுப்படுத்தப்பட்டு முழுமையாக செயல்பட்டபோது பழைய அதிகாரத்தின் பிடி ஆட்டம் கண்டது. மேலும், அடி மனை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்கள் குடியிருக்கும் “வீட்டு மனை” பெற்றனர்.
கிராம பஞ்சாயத்துகளும், ஊராட்சி ஒன்றியங்களின் பிடியிலிருந்த வளர்ச்சித் துறைகள் அனைத்தும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இதனால் பழைய அதிகாரம் வளர்ச்சிப் பணிகளில் நேரடியாக தலையிட முடியாத சூழல் உருவானது.
ஊராட்சித் தேர்தல்களில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது காலம் காலமாக கோலோச்சும் குடும்பங்களின் பழைய அதிகாரம் மேலும் குன்றியது. அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் இடஒதுக்கீடு முழுமையாக செயல்பட்டது. அதனால் சமுதாயத்தின் பெரும்பகுதியினரிடம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கல்வி உரிமை: கல்வியின் கதவுகள் பல மட்டங்களில் சமுதாயத்தின் பல பிரிவினருக்கும் திறக்கப்பட்டன. தமிழ்நாடு பாடநூல் கழகம் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மாபெரும் பங்காற்றியது. பாட நூல்களும், உபகரணங்களும் அரசு நேரடியாக வழங்கியது. உள்ளூராட்சி நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள் உட்பட பலவித பள்ளிகளும் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்வி உரிமை என்பது நிதர்சனமானது.
இதையும் படிங்க :"மது ஒழிப்பில் விசிக LKG; பாமக PhD" -அன்புமணியின் விமர்சனத்துக்கு திருமாவின் பதில் என்ன? - Thirumavalavan vs Anbumani Ramadoss
உணவு ஜனநாயகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டு குடும்பங்கள் அனைத்திற்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. பின்னர், பொது விநியோக அங்காடிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. அடக்க விலையில் விநியோகிக்கப்பட்ட பொருள்களினால் உணவு ஜனநாயகம் ஓரளவு உறுதி செய்யப்பட்டது. அதனை முழுமையாக ஜனநாயகப்படுத்தியது. இதுமட்டுமன்றி, பொது விநியோக முறையை இலக்கின்றி அனைவருக்குமானதாக தொடர்வதும் உணவு ஜனநாயகமயமாக்கலின் முக்கிய கூறாகும்.
கல்வி: பள்ளிக்கல்வி, மதிய உணவுத் திட்டம், ICDS, கல்வி உதவித் தொகை எல்லாம் மாணவர்களை நகரம் நோக்கி தள்ளியது. பள்ளிகள் பஞ்சாயத்திலிருந்து அரசுக்கு மாற்றப்பட்டது. சாலை வசதிகளை விரிவுபடுத்துதல், போக்குவரத்தில் வலுவான ஒரு பொதுத்துறையை உருவாக்கி நாட்டிலேயே சிறந்ததொரு கிராமப்புற - நகர்ப்புற தொடர்பு வசதியை உருவாக்குதல், உயர்கல்வியில் மாணவர்களை பெருமளவில் கொண்டு சேர்த்தல், தொழில்மயமாதலை ஊக்குவித்தல், புதிய தொழில்வாய்ப்புகளைக் கண்டுணர்ந்து அதற்கான முன்னெடுப்புகள் என பல தளங்களிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தியது.
கடந்த 1990களில் உலகமயமாக்கல் தொடங்கியபோது, அடுத்த முப்பதாண்டு காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக உருவானது.
தற்போதைய திமுக ஆட்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களுடன் முதலமைச்சர் முதலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மகளிர் கட்டனமில்லா பேருந்து பயண திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.