தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மருத்துவச் சான்று விவகாரம்; சித்த மருத்துவ மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியன் கைது! - fake certificate - FAKE CERTIFICATE

போலி மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கிய விவகாரத்தில் அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சித்த மருத்துவரை போலீசார் அழைத்து செல்லும் புகைப்படம்
கைது செய்யப்பட்ட சித்த மருத்துவரை போலீசார் அழைத்து செல்லும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 10:01 AM IST

கடலூர்:கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். அதில், சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழ்:இதுபற்றி அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரைச் சேர்ந்த சங்கர், நாகப்பன், அருட்பிரகாசம் ஆகிய 3 பேரும், போலி சான்றிதழ்கள் தயாரித்தது தெரியவந்தது.

மூவர் கைது:மேலும், இந்தியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான சான்றிதழ்கள் போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்த ஏராளமான பெயர் எழுதப்படாத சான்றிதழ்கள், அதை தயாரிக்கப் பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆவணங்களை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

சித்த மருத்துவர் கைது:இதற்கிடையே, சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், அகில இந்திய சித்த மருத்துவ சங்க மாநில தலைவராக உள்ள திருச்சியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் (60) என்பவர், போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு ஏஜெண்டு போல் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சியில் உள்ள சுப்பையா பாண்டியன் வீட்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுப்பையா பாண்டியன், அவரது மனைவி பெயரிலும் போலி சான்றிதழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் இருந்தது. இதனையடுத்து சுப்பையா பாண்டியனை கைது செய்த போலீசார், கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலி சித்த மருத்துவருக்கு சான்றிதழ் வழங்கியது யார்?முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் ஏராளமானோர் சித்த மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சித்த மருத்துவம் பார்த்து வந்த 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாரம்பரிய சித்த வைத்தியரான சுப்பையா பாண்டியன் மூலம் சான்றிதழ் பெற்றது தெரிந்தது.

மேலும், திருச்சியில் மாதந்தோறும் சித்த மருத்துவ கூட்டம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கவுதமன் என்ற ஒஸ்தின் ராஜா என்பவர், சுப்பையா பாண்டியனைச் சந்தித்து தான் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற்றுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை விநியோகம் செய்துள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமா? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details