தூத்துக்குடி: புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரம், ஒன்றியம் அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு, கட்சி பொறுப்பாளர்களிடம் தேர்தல் குறித்து கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை மக்கள் வாழ்விற்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி வருகின்றோம். இன்னும் இரண்டு தினங்களில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தற்போது இளைஞர்களுக்கு மது சுலபமாக கிடைக்கக்கூடிய நிலையை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. புதிய தமிழகம் கட்சி சட்டவிரோத பார்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராடியது. அதன் மூலமாக பார்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால், உரிமம் இல்லாத பார்கள் இயங்கத் தொடங்கியது. அதனை எதிர்த்தோம், ஆனால் அதனை மூடுவது போல் மூடி நாடகம் நடத்தினார்கள்.
இதுதொடர்பாக சமீபத்தில் கூட ஒரு ஆங்கில நாளிதழில் செய்தி வந்துள்ளது. அதில், டாஸ்மாக் வருமானம் குறைகிறது என்று. ஆனால், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்த போது தான் தெரியும், மது விற்பனை குறையவே இல்லை என. இந்த மது மனமகிழ் மன்றத்திற்குப் போகின்றது. ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். மனமகிழ் மன்றத்தில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பார்கள் திறக்கப்படுகிறது. இது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு.
டாக்டர் கிருஷ்ணசாமி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா?சுமார் 10 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் கிருஷ்ணசாமி இருந்துள்ளார். எந்த ஊருக்குச் சென்றாலும் பெயர் தாங்கிய கட்டடம், திட்டம் கண்டிப்பான முறையில் இருக்கும். இப்போது அந்த தொகுதி முழுவதும் காற்றாடி கம்பெனிகள் வசம் சிக்கியுள்ளது. அந்த தொகுதியை மாபியா கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் புதிய தமிழகம் கட்சியின் தொடர் போராட்டம். இந்த போராட்டம் மட்டுமின்றி, மக்கள் பணிகளும் தொடர்ந்து இருக்கும்.