சென்னை:விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கார்னேசன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. ஆலங்குளம் அருகில் அமைந்துள்ள அந்தப் பட்டாசு ஆலையில், பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.