மதுரை:தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவியில் கழிவுகள் கலப்பது குறித்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி தூத்துக்குடி, முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில், "அகஸ்தியர் அருவி அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறை, மின்துறை குடியிருப்புகள் உள்ளது. அங்குள்ள கழிவுகள் அகஸ்தியர் அருவியில் கலக்கிறது. மேலும், சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே பக்தர்களால் வெளியேற்றப்படும் கழிவுகளும் அருவியில் கலக்கிறது," என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.