செங்கல்பட்டு :செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் இடத்தில், மேய்ச்சலுக்காக மாடுகளை விட்டு, விட்டு அருகே உள்ள பழைய மகாபலிபுரம் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது, சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று அதிவேகமாக சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் உட்பட இரண்டு நபர்களை பிடித்தனர். காரில் இருந்த மீதி நபர்கள் தப்பிச்சென்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க :"குற்றங்களை கண்டுபிடிப்பதல்ல; தடுப்பதுதான் சாதனை": காவல் துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
பின்னர் விபத்து ஏற்படுத்திய காரில் வந்த இரண்டு நபர்களை பிடித்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி மாமல்லபுரம் காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது, அப்பாவி பெண்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை வாகனத்தில் இருந்து கீழே இறக்கும்படி, போலீஸ் வாகனத்தை வழிமறித்து அங்கு திரண்டிருந்த மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்கள் பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த 50 வயதுக்கு மேல் உள்ள காத்தாயி, விஜயா, கௌரி, லோகம்மாள், யசோதா ஆகிய ஐந்து பேர் என தெரிய வந்துள்ளது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய நபர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற நபர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூ.2 லட்சம் நிதியுதவி:செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்