சென்னை: சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வுகளும், இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் துப்பாக்கியை சுழற்றியவாறு இசையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
மேலும், விமானப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை முப்படையின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இந்திய விமானப் படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
அணிவகுப்பில் மயங்கி விழுந்த வீரர் (Credits - ETV Bharat Tamil Nadu) அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால், அணி வகுப்பில் கலந்து கொண்ட ஐந்து வீரர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்களை உடனடியாக மற்ற வீரர்கள் மீட்டு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். இச்சம்பவம் அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க :சென்னை ஏர் ஷோ; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
இதையடுத்து சூர்ய கிரண் உள்ளிட்ட குழுக்களின் சாகசங்களில் ஈடுபட்டனர். இந்திய விமானப் படையின் மூன்று விமானம், விமானப் படையின் கொடியை வானில் பறக்கவிட்ட படி, பறந்து அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தியது. அதனைத் தொடர்ந்து சூர்ய கிரண் குழுவினர் வானில் மூவர்ணக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ணங்களை வெளியிட்டு, வானில் வட்டமிட்டு சாகசத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய இந்திய விமானப் படையின் தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர்பிரித் சிங், "இந்திய விமானப்படையின் 92 ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு, விமானப் படையில் உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் என அனைவரும் பயனடைந்துள்ளனர்.
இந்திய விமானப் படை எந்த ஒரு நிலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் பேரிடர் மேலாண்மையில் இந்தியா மற்றும் அதன் எல்லைப் பகுதிகளிலும், நட்பு நாடுகளுக்கும் பெரும் பங்காற்றி உள்ளது. இந்திய விமானப்படை இந்தியா மட்டுமல்லாமல் மேலும் சில நாடுகளில் மீட்பு பணியில் ஈடுபட உதவுகிறது.
இந்திய விமானப் படையில் பணியாற்றுபவர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றது இந்திய விமானப் படையை மேலும் பெருமை அடைய செய்துள்ளது. வெளிநாடுகளில் இந்திய கப்பல்களை மீட்கும் பணிகளும் சரி, மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் சரி இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது.
இந்திய விமானப் படை மிகவும் வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தரங் சக்தி பன்னாட்டு கூட்டு பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் அனைத்துப் பணிகளும், இனி வெற்றிகரமாக பணியாற்றி காட்டுவோம். மேலும், விமானப்படை வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். விமானப்படை நிறைவு விழாவுக்கு ஒத்துழைத்த தமிழக அரசுக்கும் அனைத்து விதமான படை வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மூலம் இளைஞர்களை விமானப்படையில் சேர்வதற்கான உந்துகோளாக இருக்கும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்