சென்னை :இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இந்திய விமானப்படை தளங்களில் விமானப்படை தினம் கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை மெரினாவில் விமான வான் சாகசக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், மக்களுக்கான அடிப்படை தேவைகளில் தொய்வு ஏற்பட்டு, 230க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் 4 பேர் மரணம் அடைந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியைக் காண சென்னை மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக. சென்னையில் இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை விமான சாகசத்தை கண்டு ரசித்தனர்.
விமான சாகசம் முடிந்த பிறகு ஒரே நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் சாலைகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலையில் இருந்து காமராஜர் சாலை வரை ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
காமராஜர் சாலையில் மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். பல்வேறு வழிகளிலும், சந்துகளிலும் நுழைந்து பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். அதுமட்டுமின்றி சாலையில் சரியான போக்குவரத்து வசதிகளை செய்து தராமல் விட்டதன் காரணமாக பல கி.மீ தூரத்திற்கு மக்கள் நடந்தே ரயில் நிலையங்களுக்கும், மெட்ரோ நிலையங்களுக்கும் சென்றனர்
குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடக்க முடியாமல் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து சென்றனர். விமான சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்த பிறகும், மாலை 5.00 மணி வரையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலால் சாலை நிரம்பி வழிந்தது.
இந்நிலையில் இந்த சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்கள் போதுமான அடிப்படை தேவைகளின்றி தவித்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட மக்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஒமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மருத்துவமனை முதல்வர் அரவிந்த் தெரிவித்தார்.
அரசு மீது விமர்சனம்: இந்நிலையில் இந்நிகழ்ச்சியைக் காண வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்(56) என்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கார்த்திகேயன், சீனிவாசன், தினேஷ்குமார் ஆகிய மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேரம் செல்ல செல்ல ராயப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் 230-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.