திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர், தனது நண்பர்கள் அசோக், பாபு, திலிப் புருஷோத்தமன், மனோஜ் ஆகியோருடன் திருப்பத்தூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, மீண்டும் ஓசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் சென்ற காரை மனோஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில், கார் கேத்தாண்டபட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது தந்தை ஜெகதீஷ், மனைவி சரண்யா மற்றும் குழந்தைகள் முகில் ஆதி, சிபியுகன் ஆகியோருடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தங்கராஜ் ஒட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலை இடையே இருக்கும் தடுப்புகளை உடைத்து, எதிர் திசையில் பாய்ந்து, சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு கார்களிலும் பயணித்த 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயங்களுடன் கார்களில் சிக்கிக் கொண்டனர்.