தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்றம்பள்ளி அருகே லோன் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி! - போலீஸ் சீருடையில் இருந்த இருவர் கைது!

நாட்றம்பள்ளி அருகே போலியாக போலீஸ் சீருடை அணிந்து பண மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் ஏற்கனவே கைதான நிலையில், மீதியிருந்த 4 நபர்களை நாட்றம்பள்ளி தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேர்
கைது செய்யப்பட்ட நான்கு பேர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருப்பத்தூர் : நாட்றம்பள்ளி அருகே ரூ.2 கோடி லோன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில், கடந்த 22ம் தேதி தேவராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நரேஷ்பாபு மற்றும் கோபிராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும், பண மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் பணத்தையும் கைபற்றினர்.

இந்நிலையில் இதே வழக்கில் இன்று மோசடியில் ஈடுபட்ட வேலூர் வேலப்பாடி பகுதியைச் சேர்ந்த குமரவடிவேல் (57) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த சயத்அலி(37), வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகன்குமார் (27) மற்றும் சதீஷ்குமார் (33) ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் நாட்றம்பள்ளி போலீசார் அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் போலியான காவலர்களின் சீருடைகளையும் கைப்பற்றினர்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது, "கர்நாடகா மாநிலம், சிக்பலாபுரம் மாவட்டம், சிந்தாமணி தாலுகா வெங்கடகிரி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவரது மகன் சதீஷ் (37). இவர் 16 லாரிகளை வைத்து சிமெண்ட் பாரம் ஏற்றி அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய பணம் தேவைப்படுகிறது என்று தனது வீட்டை அடமானம் வைத்து கடன் பெற பல இடங்களில் பணம் கேட்டு வந்துள்ளார். அப்போது, சதீஷ் தனது லாரியை ஓட்டும் ஓட்டுநரான நீலகண்டன் என்பவரிடம் லோன் ஏதாவது கொடுக்கும் நபர் உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டுள்ளார்.

அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நீலகண்டன் சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது தேவராஜிடம் லோன் குறித்து கேட்ட போது ரூ.4 லட்சம் கமிஷன் மற்றும் வீட்டு ஆவணங்கள் கொண்டு வந்தால் ரூ.2 கோடி கடன் பெற்று தருவதாக சதீஷிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :ஆன்லைனில் பண மோசடி செய்த மூன்று பேர் கைது.. மதுரை தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

அதற்கு சதீஷ் சம்மதம் தெரிவித்து பணம் மற்றும் வீட்டு ஆவணங்களை எடுத்துகொண்டு நண்பர்கள் சிலருடன் சென்னை நோக்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காரில் சென்றுள்ளார். அப்போது தேவராஜ் சென்னையிலிருந்து பணத்தோடு வந்து கொண்டிருப்பதாகவும், நீங்கள் நாட்டறம்பள்ளி, நெக்குந்தி சோதனைச்சாவடி அருகே வருமாறும் கூறியுள்ளார்.

சோதனைச்சாவடி அருகே சென்ற போது தேவராஜ் தான் கொண்டு ரூ.2 கோடி போலி பணத்தை காட்டியுள்ளார். பின்னர் தன்னுடைய காரில் சதீஷை அழைத்துக் கொண்டு பணத்தை இங்க எண்ண வேண்டாம் ஏதாவது பிரச்னை வரும். மறைவான இடத்தில் பணத்தை எண்ணிக்கொள்ளலாம் எனக் கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது பையனப்பள்ளி கூட்ரோடு அருகே ஒரு காரில் 2 பேர் காவல் சீருடையிலும், 3 பேர் டிப் டாப் உடையில் நின்று கொண்டிருந்தவர்கள் தேவராஜ் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்து பணம் குறித்து விசாரணை செய்துள்ளனர். பின்னர் எதுவாக இருந்தாலும், காவல் நிலையம் வாருங்கள் அங்கு பேசிக்கொள்ளலாம் எனக் கூறி சதீஷ் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் அருகில் இருந்த பர்கூர் காவல் நிலையத்திற்கு சென்று, காவல் உடையில் வந்து சோதனை செய்து பணத்துடன் எடுத்துச் சென்றது குறித்து தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவ்வாறு யாரும் சோதனை செய்யவில்லை என தெரிவித்ததும், சதீஷ் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் இச்சம்பவம் நடைபெற்ற இடம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்குமாறு பர்கூர் போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக சதீஷ் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் "என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details