திருப்பூர்:காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில் கடந்த 9-ஆம் தேதி வீரகுமாரசாமி கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்காக 17 வயது சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே சிறுமி மாயமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளார். கிடைக்காததால் உறவினர்களுக்குத் தகவல் அளித்துத் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறுநாள் காலை வீடு திரும்பிய சிறுமி, தன்னை சிலர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக தனக்கு நடந்த கொடுமையைக் கூறி அழுதுள்ளார்.
பின்னர், இது குறித்து சிறுமியின் தாயார் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம்(11.03.2024) அன்று வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகர், செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.