கோயம்புத்தூர்:கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் (55). இவருக்கு மன்னார்காடு பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலர் அறிமுகமாகியுள்ளனர்.
அவர்கள் தாங்களும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், இடம் விற்பது , வாங்குவது தொடர்பாக தங்களை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்துல் அஜீஸ் கேரளாவில் இருந்து கோவை வந்த போது, அபூபக்கர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் இரிடியம் என்ற ஒரு பொருளை காட்டி, இது சக்தி வாய்ந்தது எனவும், இதனுடைய விலை இரண்டு கோடி ரூபாய் என்றும் மேலும், இதனை வாங்கி மார்க்கெட்டில் விற்றால் உடனே 10 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதை தொடர்ந்து அப்துல் அஜீஸ் இரண்டு கோடி ரூபாயை அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்டவர்களிடம் கொடுத்து உள்ளார். ஆனால், அதன் பிறகு அவர்கள் அந்த இரிடியம் பொருளையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு - சென்னை ஐகோர்ட்!
பணத்தை பலமுறை திருப்பி கேட்டும் கொடுக்காத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல் அஜீஸ் கோவை ஆர். எஸ். புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபூபக்கர், ஜான் பீட்டர், செந்தில்ராஜ், ஜோதிராஜ், அனில் குமார் , உத்தமன், சசிக்குமார் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் அனில் குமார், ஜோதிராஜ், உத்தமன், சசிக்குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்த போலீசார், செந்தில்ராஜ், ஜான் பீட்டர், அபுபக்கர் ஆகியோரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சதுரங்க வேட்டை பட பாணியில், இல்லாத இரிடியத்தை காட்டியது மட்டுமல்லாமல், அது மிக சக்தி வாய்ந்தது, மார்க்கெட்டில் 10 கோடி வரைக்கும் விற்கப்படும் என ஆசை வார்த்தைகளை கூறி, கேரள ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்