தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செட் தேர்வை நடத்துகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்! உதவிப் பேராசிரியர் பணிக்கான நேரடித் தேர்வு எப்போது?

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஆசிரியர் தேர்வு வாரியம் -கோப்புப்படம்
ஆசிரியர் தேர்வு வாரியம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய, அரசு சார்பில் நடத்தப்படும் நெட் (NET) அல்லது செட் (SET) எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் 'செட்' தேர்வை நடத்தி வருகின்றன.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு 2024ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் செட் தேர்வில் பங்கேற்க சுமார் 96 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் ஜூன் 7 மற்றும் 8 ந் தேதிகளில் செட் தேர்வினை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டது. முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால் செட் தேர்வு நடக்கும் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்டாமல் இருந்தது.

இந்த நிலையில், உயர்கல்வித்துறை செயலாளர் ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவருக்கு செட் தேர்வினை கம்ப்யூட்டர் முறையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உள்ளார் இதுதொடர்பான கடிதத்தில், 'கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வினை நடத்துவதற்கு திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் தேர்வினை கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடத்த வேண்டும். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தப்பட வேண்டும்; எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, உயர்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் செட் தகுதித் தேர்வினை நடத்துவதற்கான பணிகளை துவக்கி உள்ளோம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செட் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் , அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடிப் போட்டித் தேர்வு மூலம் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் 14 ந் தேதி முதல் மே 15 ந் தேதி வரையில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றது.

அப்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2024 ம் ஆண்டு செட் தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024 ஆகஸ்ட் மாதம் 4 ந் தேதி போட்டி எழுத்துத் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. அந்தத் தேர்வும் நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செட் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தப் பின்னர் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேரடி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details