சென்னை: காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சின்னத்திரை நடிகை தீபா பல தனியார் சேனல்களில் வெளியாகும் தொடர் நாடகங்களில் நடித்து வருகிறார்.
தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், தன்னுடைய மகனுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு காதல் ஏற்படவே இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு தீபாவின் வீட்டில் வசித்து வந்தனர்.
இதனையடுத்து சமீப காலமாக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதால், தீபாவைப் பிரிந்து கணேஷ் பாபு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.