சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.
இருப்பினும், மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற 5ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது.
இந்த நிலையில், இன்று புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி படுக்கையில் படுத்திருந்தவாறு இருந்தார். இதைப் பார்த்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவலர், செந்தில் பாலாஜிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றk காவல் 52வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி; என்ன காரணம்?