சென்னை: 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி என அனைத்து தரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் பிரச்சார களம் திமுக vs அதிமுக என இருந்த நிலையில், ஆரம்பத்தில் திமுகவினர் பாஜக மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் கூட மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை விமர்சிப்பதைத் தவிர்த்து, திமுக மீதும், திமுக அரசின் மீதும் கடுமையான விமர்சனத்தை அதிமுக தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால் தங்களுக்குச் சிறுபான்மையினர் வாக்குகளும், நடுநிலையாளர்கள் வாக்குகளும் கிடைக்கும் என நினைத்து இருந்த நிலையில், தொடர்ச்சியாக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தான் தற்பொழுது கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகி உள்ள நிலையில், தமிழகத் தேர்தல் பிரச்சாரக் களம் நேற்றிலிருந்து திமுக vs பாஜக என மாறி வருவது போல் நிலை உருவாகியுள்ளது. தொடர்ச்சியாக, திமுக மற்றும் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்த பாஜக தற்பொழுது திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தமிழக தேர்தல் களம் திமுக பாஜகவிற்கு இடையேயான போட்டியாக மாறி வருகிறதா என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து:இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பேசியபோது,"தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் திராவிட கட்சிகளுக்குத் தான் வாக்களிப்பார்கள், இந்த தேர்தலிலும் அதுவே தான் நடக்கும். கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றைக் கிளப்புவதன் மூலம் பாஜக தொடர்ச்சியாக தங்களை ஒரு பேசு பொருளாக்க முயற்சித்து வருகின்றனர்.
இதேபோல் கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதமாக மாற்றுவதன் மூலமாக, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் திமுக vs பாஜக எனும் தோற்றத்தை உருவாக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. அது எடுபடாது களம் திமுக vs அதிமுக இடையே தான் போட்டி இருக்கும். வேண்டுமென்றால் பாஜக கூட்டணி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வாக்குகளை வேண்டுமானால் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்! - Director Ameer