Senior Congress leader Thangabalu திருநெல்வேலி: நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, இன்று (மார்ச் 31) காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடு முழுவதும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மக்களால் பெரிதும் போற்றப்படும் கூட்டணியாக மாறி உள்ளது.
இந்தக் கூட்டணி, இந்திய அளவில் 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சீட்டு ஒதுக்குவதில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அன்றைய தினமே பேசி சரி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
கூட்டணியாக உள்ள ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் இரு வேறு நபர்கள் அல்ல; இருவரும் ஒருவரே.
தமிழ்நாட்டில் வெற்றி பெற திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரின் பிரச்சாரமும், தமிழ்நாட்டு அரசு செய்த சாதனைகளுமே போதுமானது.
இருந்த போதிலும், முதலமைச்சர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே பிரச்சார மேடையில் பங்கேற்பார்கள். மோடியை ஒப்பிடுகையில், ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டில் 79 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. தென்னிந்தியாவில் ஒரு தொகுதி கூட பாஜக வெற்றி பெறாது. வட இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பாஜக வெற்றி பெறும்.
எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. மோடிக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களை கைது செய்து வருகிறார்கள். மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறை என்று நாட்டில் எதெல்லாம் நடக்கக் கூடாதோ அதெல்லாம் நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"பாமகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" - சௌமியா அன்புமணி!