வேலூர்:குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் சார் பிரச்னைகள், வலிப்பு நோய்களுக்கான தடுப்பு முறைகள், மருத்துவ சிகிச்சைகள் குறித்த 14வது சர்வதேச கருத்தரங்கம் பாகாயம், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (பிப்.08) தொடங்கியது.
வேலூர் மாவட்டம், பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சைல்ட் நியூரோகான் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள், நரம்பியல் நோய் தொற்றுகள் மற்றும் வலிப்பு நோய் நரம்பியல் செயல்பாடுகளால் செயல் திறன் இழப்பு ஆகியவை குறித்த கருத்தரங்கம் நடக்கிறது.
இது தொடர்பாக சைல்ட் நியூரோகான் கருத்தரங்கின் தலைவர் மருத்துவர் மாயா தாமஸ் மற்றும் மருத்துவர் சங்கீதா யோகானந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சி.எம்.சி மருத்துவமனையின் நரம்பியல் அறிவியல் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் நோய்கள் குறித்த 14வது சர்வதேச கருத்தரங்கம் இன்று துவங்கி, வருகிற 10ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
மேலும், அயல்நாடுகளைச் சேர்ந்த 15 விஞ்ஞானிகள், மருத்துவர்கள், 90 உள்நாட்டு நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கூட நரம்பியல் பாதிப்பால் பல பிரச்னைகள், மூளை செயல்பாடுகள் குறைதல் ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கு தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைந்த அளவு ஆக்சிஜன் செல்வது மற்றும் மரபனு பிரச்னைகளுமே காரணம்.