சென்னை:காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை பெரம்பூர் எம்ஹெச் சாலையில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மாவட்ட தலைவர் டெல்லி பாபு முன்னிலையில் தொடங்கியது. இந்த நடைபயணமானது எம்கேபி நகர் சாலை வழியே தொடங்கப்பட்டு முத்தமிழ் நகர், பாரதி நகர், வியாசர்பாடி நான்கு வழிச்சாலை எருக்கஞ்சேரி வழியாக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
அப்போது அவர் பேசுகையில், “வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, வட்டாரம், நகரம் முழுவதும் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைவர்கள், வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், கிராம தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கால் படாத இடமே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடைபயணத்தை தொடங்கி இருக்கிறோம்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில நிர்வாகிகள் சார்பில், பாதயாத்திரையை தொடங்க இருக்கின்றனர். இந்த பாதயாத்திரை பாதியில் வாகனங்களில் ஏறி செல்வதல்ல, முழுமையான நடைபயணம். மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடிய இளைஞர்களுக்கு இந்த நடைபயணம் விழிப்புணர்வு பிரச்சார பயணமாக வழிவகுக்கும்.