சென்னை: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மேகதாது அணையைத் தடுத்து நிறுத்திடவும், ராசி மணல் அணை கட்டுமானத்தை தமிழ்நாடு அரசு துவங்கிட வேண்டும் என்ற ஒத்த கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் தமிழக விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழு இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "காவிரி நீர் உபரியாக கடலில் கலப்பதாகக் கூறி கர்நாடக அரசாங்கம் சட்டவிரோதமாக மேகதாது அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நீரை தடுப்பதற்காக முயற்சி எடுக்கின்றனர்.
நாம் ராசிமணலில் அணை கட்டினால் 64 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும் என்று திட்டமிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. தற்போது தமிழ்நாடு தண்ணீரை கடலில் கலக்கச் செய்வதாக உண்மைக்கும், இயற்கைக்கும் புறம்பான மற்றும் நீதிக்கு எதிரான கருத்துக்களை கர்நாடக அரசாங்கம் முன்வைக்கின்றது.
எனவே, எங்களாலும் ராசிமணலில் காமராஜர் பெயரில் அணையைக் கட்ட முடியும் என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒத்த கருத்தை உருவாக்குகின்ற வகையில், அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகின்றோம். அதன் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதற்கு வாய்ப்பிருக்குமானால், எங்களது முழு ஆதரவையும் வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.