சென்னை:ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கோபாலபுரம், சேக்காடு, தென்றல் நகர், வி.ஜி.என் குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், மழைக்காலம் என்றாலே இந்த சுரங்கப்பாதை நீரால் மூழ்கி காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று (செப்.25) இரவு முதல் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக, சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இத்தகையச் சூழலில், ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனை அடுத்து, ஆவடி மாநகராட்சியால் இந்த சுரங்கப் பாதையில் தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்றுவதற்காக நீர் இறைக்கும் ராட்சத மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், குறைந்த அளவே நீர் வெளியேற்றப்படுவதால் கூடுதல் ராட்சத மின்மோட்டார்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னைவாசிகளே குடையை மறந்துடாதீங்க.. விமான சேவை கடும் பாதிப்பு.. தலைநகரில் தொடரும் மழை!
மேலும், சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில் தேங்கக் கூடிய நீர் முழுவதும் இந்த சேக்காடு சுரங்கப்பாதை வழியாக செல்வதால் விரைவில் சுரங்கப்பாதை நீரால் நிரம்பி விடுகிறது என்பதால், சிடிஎச் சாலையில் செல்லக்கூடிய மழை நீரை மாற்றுப் பாதையில் கொண்டு செல்லவும், புதிதாக கூடுதல் ராட்சத நீர் இறைக்கும் மின்மோட்டார்கள் அமைத்திடவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும். சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல, சென்னை கொரட்டூர் இஎஸ்ஐ (ESI) மருத்துவமனையில் மழை நீர் தேங்கியுள்ளதால் மருந்து வாங்க வருவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனை வளாகத்திற்குச் செல்ல செங்கல் வைத்து, அதன் மூலம் கடந்து செல்லக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், ஒவ்வொரு மழைக்கும் இந்த மருத்துவமனையில் மழை நீர் தேங்கி வருவதால் தற்காலிகமாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தொடர்ச்சியாக மழை நீர் தேங்கும் நிலை நீடித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்