சென்னை: அயோத்திதாசப் பண்டிதர் 110ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைத்துள்ள அயோத்திதாசர் பண்டிதர் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர் புரட்சியாளர் அயோத்திதாசன் பண்டிதர். அவரை நாம் தமிழர் கட்சி பெருமிதத்தோடு போற்றுகிறோம்.
தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெறும். மத்தியில் இருக்கக் கூடிய எந்த கட்சிகளுக்கும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இரட்டை ஆட்சி முறை தான் சரியானது. மாநில ஆட்சி, மத்திய அரசு என இரண்டும் செயல்பட வேண்டும்.
வட இந்தியாவில் யாராவது ஒரு மீனவன் பலியானால், அதற்கு உடனே மோடி பார்க்கிறார், ஆனால் தமிழகத்திலுள்ள மீனவர்கள் இறந்தால் ஏன் வந்து பார்க்கவில்ல? ரூபாய் 16 லட்சம் கோடி முதலாளி உடைய கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். இது ஏழைகளுக்கான ஆட்சியாக இல்லாமல், பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்கிறது. ஆணும், பெண்ணும் சமம் தான். பிரபாகரன், பெண் விடுதலை இல்லை என்றால் மண் விடுதலை இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
விவசாயம் என்பது வாழ்வில் ஒரு பண்பாடாகும். விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இருக்கும் விமான நிலையம் முழு அளவில் செயல்படாமல் தான் உள்ளது. பாஜகவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் தான். மோடி வந்தாலும் அல்லது வேறு ஏதேனும் நபர்கள் அந்த பதவிக்கு வந்தாலும், அவர்கள் ஒரு கருவியாகத் தான் செயல்படுவர்.
அதானி துறைமுகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் இறங்கியது. அந்த பொருள் எங்கு போனது, யாருடையது என விசாரணை மேற்கொள்ளாமல், இஸ்லாமியர் என்பதனால் அமீர் மீதும், ஜாபர் சாதிக் மீது மட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரைப்படம் எடுக்கும் பொழுது தயாரிப்பாளர் பணம் கொடுக்கிறார். நாங்கள் வேலை செய்கிறோம் என்று தான் பார்க்க முடியுமே தவிர, அவர் அந்த பணத்தை எப்படி சம்பாதித்தார் என நாங்கள் கேள்வி கேட்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் தவறான விஷயங்கள் நடப்பது இயல்பு தான். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என நீங்களே கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது. தி.மு.க ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் முன்பு விளம்பரம் செய்ததோடு கொடுத்துவிட்டு ஆயிரம் முறை சொல்லிக் காட்டுவது மட்டுமின்றி அதில், மிச்சப்படுத்தி வைத்து இருக்கிறீர்களா எனவும் கேட்கிறார்கள்.
நிலவில் சென்று நீர் காற்று இருக்கிறதா என ஆராய்ச்சி செய்வது முக்கியமில்லை, 28 சதவீத மக்கள் இரவு உணவின்றி தூங்கச் செல்கிறார்கள். இங்கு காற்று மாசுபாடு அடைந்துள்ளது. நீர்நிலைகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதை சீர் செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம். அடுத்த முறை பாஜக நிலவில் கூட தேர்தலில் நிற்கும்.
அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, காற்றாலை, சூரிய தகடுகள் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். அதிகப்படியான அளவில் நிதியை ஒதுக்குவதற்காக மட்டுமே இது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வருகிறது. அனைத்து துறைகளையும் தனியாருக்கு ஒதுக்கிவிட்டு, அரசு அவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்கிறது.
மற்ற நாடுகளில் நீர் மேலாண்மை முறையாக கணக்கிடப்பட்டு, அதன் மூலம் பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. கார் தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் அதிகப்படியான நீர் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் பிற நாடுகளில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குகிறார்கள். தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள கார் தொழிற்சாலைகளில் எத்தனை தமிழர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு தொடக்கம்: விழுப்புரத்தில் 5,008 பேர் எழுதுகின்றனர்! - Neet Exam