சென்னை: இந்திய விமானப்படை (Indian Air Force) தனது 92வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2024 அக்டோபர் 6ம் தேதியன்று சென்னை மெரினா வான் பகுதியில் விமான சாகசக் கண்காட்சியை நடத்துகிறது. இதன் இரண்டாம் நாள் ஒத்திகை இன்று (அக். 2) நடைபெற்றது. இதில், 22 விமானங்கள் கலந்து கொண்டு பல்வேறு சாகசங்களை வெளிப்படுத்தின.
இரண்டாம் நாள் சாகச ஒத்திகை நிகழ்ச்சிக்கு பின், விமான சாகசம் குறித்து ஏர் கமாண்டர் அசுதானி செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "21 வருடத்துக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது இப்பொழுதும் புல்லரிக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது காட்டும் அன்பு அளவு கடந்தது. மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் நிறுவன தினம் சாகச நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்ட பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து இருந்தேன்.
இந்த மெரினா கடற்கரையில் எப்படி இந்த சாகச நிகழ்ச்சிகளை செய்ய முடியும். இதற்கு எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்பது குறித்து ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், அதை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும், மீனம்பாக்கம் இந்தியன் ஏர்போர்ட் நிர்வாகமும் சிறப்பாக செய்து முடித்தனர்.
இந்திய விமானப் படையின் ஏர் கமாண்டர் அசுதானி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) விமான சாகச ஒத்திகையை எந்தவித தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக நடத்தி முடிக்க முடிந்திருக்கிறது. இன்று நடந்த ஒத்திகையில் கடற்கரையில் ஒரு தற்காலிக கட்டடத்தை நிறுவி அதினுள் பயங்கரவாதி நுழைந்தால் எப்படி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்பதை எங்களுடையக் குழுவை வைத்து நடத்தி முடித்திருக்கிறோம்.
விமான சாகசத்திற்காக ஆறு இடங்களில் இருந்து 54 விமானங்கள் வந்திருந்தது. இன்று அதில், 22 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தது. 22 விமானங்களும் வெவ்வேறு தொழில்நுட்பத்திலும் வெவ்வேறு வேகத்தையும் கொண்டது. அவை அனைத்தையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இயக்குவது என்பது கடினமாக ஒன்று அதை நாங்கள் செய்திருக்கிறோம்.
இதையும் படிங்க :பாரதமே அதிரப்போகுது; விமானப் படையின் திகைப்பூட்டும் சாகசத்திற்கு தயாரா?
விமான சாகச நிகழ்ச்சியில் விமானங்களுக்கு மட்டுமில்லாமல் பார்க்கின்ற பொது மக்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில், இந்த விமான சாகசம் ஒத்திகை நடைபெற்று முடிந்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டில் சண்டிகரிலும், கடந்த வருடம் பிரயாக்ராஜிலும், இந்த வருடம் சென்னையில் நடைபெறுகிறது.
நான் விமானியாக பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். ஒரு விமானியாக சொல்கிறேன் 4000 மீட்டர் நீளம் கொண்ட சென்னையின் கடற்கரை மாதிரி சாகசம் செய்வதற்கான இடத்தை நான் வேறு எங்கும் கண்டதில்லை. இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு முக்கிய இலக்காக கருதப்படுகிறது.
பொதுவாக ஒரு சாகச நிகழ்ச்சிக்கு முன் 10 நாட்கள் ஒத்திகை நடைபெறுவது வழக்கம். சென்னை சாகச நிகழ்ச்சிக்கு நேரம் குறைவாக இருக்கிறதால் ஒத்திகையும் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அனைத்து ஒத்திகைகளும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது போலவே மக்கள் அதிகம் அளவு வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைக்கிறேன். குறிப்பாக, 10லிருந்து 15 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகச நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அதிக மக்கள் வந்தார்கள் என்றால் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.
வருகின்ற மக்களைவீடியோ மூலம் பதிவு செய்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று பார்த்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் கணக்கிட இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழக மக்களுக்கு சொல்ல விரும்புவது இந்திய விமானப் படையில் உள்ள அனைத்து விமானங்களை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கண்டுகளிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. பொதுமக்கள் தவறவிடாமல் தங்களது குடும்பத்துடன் வந்து 4ம் தேதி நடைபெறும் ஒத்திகையையும், 6ம் தேதி நடைபெறும் சாகச நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டும்" என்று அசுதானி தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்