சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பரவலாக அதிக மழை பெய்துள்ளது. முக்கியமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இதன் காரணமாக 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 14) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் (Special classes) நடத்தப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
- தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கூறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகள் அல்லது கல்லூரிகள் எந்த விதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளனர்.