அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "2019ல் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த நிலையில், 39 தொகுதிகளில் 38 தொகுதியை வென்றது திமுக கூட்டணி. தற்போது ஆளுங்கட்சியாக, கடந்த 33 முன்னேறிய மாதங்களில் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம்.
குறிப்பாக, பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், கல்லூரி செல்லும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை என பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி வென்றால், இந்தியாவில் சுங்கச் சாவடிகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும். ரூ.1000 விற்கப்படும் கேஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதிக்கு அளித்துள்ளார்.
அதேபோல் ராகுல் காந்தி அவரது தேர்தல் அறிவிப்பில், ஏழை எளிய மக்களுக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மயிலாடுதுறை வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா நீதிமன்றங்களில் குரல் எழுப்பியவர். இனி நீதிமன்றங்களில் மட்டுமல்லாது தொகுதி மக்களின் பிரச்சனைக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்.
அனைத்து திட்டங்களுக் பெண்களுக்கு என்று ஆண்கள் எங்களிடம் கோபப்படுகின்றனர். பெண்கள் இந்த நாட்டின் கண்கள். எனவே, வரும் 19 ஆம் தேதி 7 மணிக்கே அனைவரும் வாக்களிக்கச் செல்லுங்கள். வெயிலை காரணம் காட்டி வீட்டில் சீரியல் பார்க்காதீர்கள். மயிலாடுதுறை தொகுதி வேட்பாளார் ஆர்.சுதாவை கை சின்னத்தில் வக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.
பிரச்சாரத்தில், பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். கும்பகோணம் ஒன்றியங்களில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரம் செய்தார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. பாதுகாப்புடன் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள்! - Leopard Movement In Mayiladuthurai