தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 5,845 ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம் - tamil nadu school teachers transfer

Tamil Nadu school teachers transfer: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் 5,845 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு மூன்றாண்டுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்ககம்
பள்ளிக்கல்வி இயக்ககம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 5:30 PM IST

சென்னை:அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் 5845 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு மூன்றாண்டுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் பொழுது அந்த ஆசிரியர்கள் மீண்டும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிய அனுமதிக்கலாம் எனவும், ஆசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கும் பணி மாறுதல் வழங்கலாம் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 14,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 800க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 10,700 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது இதன் மூலம் அரசு தொடக்கப் பள்ளிகளில் 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் காலி பணியிடங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை இல்லாமல் உபரியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியத்தினை அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் நிதியுதவிபெறும் 5,018 தொடக்கப் பள்ளிகளும், 1,496 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன, இந்தப் பள்ளிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஆண்டுதோறும் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலர்களால் (தொடக்கக்கல்வி) ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மான்யம் ஆண்டுதோறும் அரசால் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

2023-2024 ஆம் ஆண்டிற்கு மாணவர்களின் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு மாவட்டக்கல்வி அலுவலர்களிடமிருந்து தொகுப்பறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பணியாளர் நிர்ணய தொகுப்பறிக்கை தமிழ்நாட்டில் 5.018 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 3,809 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகவும், அவற்றில் நிரப்ப தகுந்த காலி இடமாக 775 உள்ளது.

அதேபோல் 1,496 அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 1,737 இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடங்களும், 364 ஆசிரியருடன் நிரப்ப தகுந்த காலிப் பணியிடமும் உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் 299 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உபரியாக உள்ளன. நிரப்ப தகுந்த காலி பணியிடமாக 201 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உள்ளது.

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியருடன் உபரியாக 5,546 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 299 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தம் 5,845 பணியிடங்கள் ஆசிரியருடன் உபரியாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உபரியாகப் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தொடர்ந்து அதேபள்ளியில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில், அரசு மானியம் விரயமாவதுடன், தேவையில்லாத நிதியிழப்பு ஏற்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி பல்வேறு தணிக்கைத் தடைகள் மாநிலக் கணக்காயரால் எழுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அரசு நிதியுதவிபெறும் (Aided) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல், மாற்றுப்பணி வழங்க அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.

பணிநிரவல் விதிமுறைகள்:

1.பணிநிரவல் கூட்டுமேலாண்மையும் ஒவ்வொரு ஒரு அலகாக கருதப்படுவதால், அக்கூட்டுமேலாண்மையில் உபரியாக பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை அதே மேலாண்மையின் கீழ் செயல்படும் பிற பள்ளிகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்யப்படவேண்டும்.

2.அவ்வாறு பணிநிரவல் செய்யும் போது உபரி ஆசிரியர்களை முதலில் வட்டாரத்திற்குள்ளும், வட்டாரத்திற்குள் தகுதியான காலிப்பணியிடம் இல்லை எனில் மாவட்டத்திற்குள்ளும் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். பணிநிரவலுக்கு உட்படும் ஆசிரியர் விருப்பப்பட்டால் மாவட்டத்திற்கு வெளியே பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.

3.ஒரு கூட்டுமேலாண்மையின் கீழ் செயல்படும் நிகழ்வில், உபரி ஆசிரியர்களை பணியிடங்களுடன் உதவிபெறும் பிரிவில் பயிலும் (Aided) மாணவர்கள் எண்ணிக்கை மிகுவதால் தேவை ஏற்படும் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு பணிநிரவல் பணியிடம் வழங்கப்படுவதால் அம்மேலாண்மையின் கீழ் செயல்படும் உதவிபெறும் பள்ளிகளுக்கென அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்னிக்கைக்கு மேல் பணிநிரவல் மிகுதல் கூடாது.

4.பணிநிரவல் மேற்கொள்ளும்போது பணியில் இளையவர், பிற நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள நிரப்பத்தகுந்த காலிப் பணியிடத்திற்கு பணிநிரவல் செய்யப்பட வேண்டும். பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி ஆசிரியராக கண்டறியப்பட்டவர்களில் மூத்தவருக்கு முதலில் பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.

5.ஒவ்வொரு தனி மேலாண்மைப் பள்ளியும், ஒரு அலகாக கருதப்படுவதால் அத்தனி மேலாண்மையில் உபரியாக பணிபுரிந்துவரும் ஆசிரியர்களை அவர்தம் விருப்பத்தின் பேரில், பிற நிதியுதவிபெறும் பள்ளிகளில் உள்ள தகுதியான காலிப்பணியிடங்களுக்கு அப்பள்ளி நிர்வாகம், பள்ளிக்குழு ஒப்புதல் பெற்று பணிநிரவல் செய்யப்பட வேண்டும்.

6.பணிநிரவல் மேற்கொள்ளும்போது ஆசிரியர் தற்போது பணிபுரியும் பள்ளியின் அருகாமையில், வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு வட்டாரத்திற்குள் பள்ளி இல்லை எனில் மாவட்டத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். பணிநிரவல் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

7.மாணவர் சேர்க்கையின்மை காரணமாக செயல்படாமல் உள்ள (Zero Enrollment) நிதியுதவிபெறும் தொடக்க , நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தகுதியான காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். அதன்பிறகும் மீதமுள்ள ஆசிரியர்களை பிற அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி மூலம் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நிலையில் மாற்றுப்பணியை இரத்து செய்து தாய்பள்ளிக்கு பணியில் மூதுரிமை உள்ள ஆசிரியரை திரும்ப அனுப்பவேண்டும்.

8.பணிநிரவல் online வழியாக EMIS இணையதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய பதிவுகள் அத்தளத்தில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

மாற்றுப்பணி
1. நிதியுதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் மாற்றுப்பணியில் அனுப்பப்படும்போது அவர்பணியில் இளையவராக இருக்கவேண்டும்.

2. மாற்றுப்பணியில் அனுப்பப்படும் ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நிலையில் மாற்றுப்பணியில் சென்ற மூத்த ஆசிரியர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து அவரை தாய்ப்பள்ளியில் திரும்ப பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும்.

3. மாணவர் சேர்க்கை அதிகம் உள்ள அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் அனுமதிக்கப்பட வேண்டும். அதன் பிறகும் உபரி ஆசிரியர்கள் இருப்பின், அவ்வுபரி ஆசிரியர்களை அரசு மாதிரிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படாமல் உள்ள பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும்.

4. மேலும், காலிப்பணியிடத்தில் மூன்றாண்டுகளுக்கு அரசுப் பள்ளிகளில் ஏற்படும் மாற்றுப்பணி ஆணைபெற்று உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றிவரும்போது ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய நியமனம் ஆகிய நேர்வுகள் தவிர வேறு வகையில் அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது.

5. மாற்றுப்பணியானது மூன்றாண்டுகளுக்கு மேற்படும் நிகழ்வைப் பொறுத்தவரை அவரது பணி பாதிக்கப்படாமல் மாற்றுப் பணியானது நீட்டிக்கப்பட வேண்டும்.

6.மாற்றுப்பணியானது online வழியாக EMIS இணையதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய பதிவுகள் அத்தளத்தில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். எப்படி விடுவிக்கப்பட்டார்? - கோர்ட்டில் அமைச்சர் தரப்பு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details