சென்னை:தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதில் மாணவர்களின் திறன்கள், பள்ளியின் சாதனைகள் போன்றவை பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியரின் ஆர்வத்தால் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. பிற பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு போதுமான அளவு நிதி இல்லாதது. எனவே அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பிப்ரவரி 10க்குள் ஆண்டு விழா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு மேலும், தற்பொழுது மாணவர்களிடம் பாடத்திட்டம் இன்றி, பிற செயல்பாடுகளும் கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் கல்வியுடன் சேர்த்து சமூக சிந்தனை, கலாச்சாரம், ஓவியம், விளையாட்டு, நல்லொழுக்கம், தனித்திறன் வளர்த்தல் போன்றவற்றிலும் மாணவர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகின்றனர். இதுபோன்ற கல்வி தவிர செயல்பாடுகளுக்காக ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் அகமதிப்பீடு 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் ஆண்டுவிழா நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு, அந்த மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் மாணவனின் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன.
கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை, ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 2023 - 2024ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
பள்ளிகளில் பிப்ரவரி 10க்குள் ஆண்டு விழா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை அவர் தம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழாவினை கொண்டாடிடப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 576 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ஆண்டு விழாவிற்கான செலவினங்கள் கணக்கிடப்பட்டு சுமார் 15 கோடி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் 50 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த பள்ளிகளுக்கு ஆண்டு விழா நடத்த ரூ.50 ஆயிரம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 1,000 முதல் 2 ஆயிரம் மாணவர்கள் வரை படிக்கும் 339 மேல்நிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள், 2 தொடக்கப் பள்ளிகள் என 350 பள்ளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ஆண்டு விழாவிற்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளன.
501 மாணவர்கள் முதல் 1,000 மாணவர்கள் வரை படிக்கும் 1, 251 மேல்நிலைப் பள்ளிகள், 79 உயர்நிலைப் பள்ளிகள், 64 நடுநிலைப் பள்ளிகள், 44 தொடக்கப்பள்ளிகள் என 1,438 பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 251 முதல் 500 மாணவர்கள் வரை படிக்கும் 1,112 மேல்நிலைப்பள்ளிகள், 564 உயர்நிலைப் பள்ளிகள், 493 நடுநிலைப் பள்ளிகள், 288 தொடக்கப்பள்ளிகள் என 2 ஆயிரத்து 457 பள்ளிகளுக்கு தலா 8 ஆயிரம் வீதம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
101 முதல் 250 மாணவர்கள் வரை படிக்கும் 372 மேல்நிலைப்பள்ளிகள், 1,859 உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆயிரத்து 512 நடுநிலைப் பள்ளிகள், 2 ஆயிரத்து 236 தொடக்கப்பள்ளிகள் என 7 ஆயிரத்து 979 பள்ளிகளுக்கு தலா 4 ஆயிரம் வீதம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 100 மாணவர்களுக்குக் கீழ் படிக்கும் 32 மேல்நிலைப்பள்ளிகள், 587 உயர்நிலைப் பள்ளிகள், 2 ஆயிரத்து 903 நடுநிலைப் பள்ளிகள், 21 ஆயிரத்து 780 தொடக்கப்பள்ளிகள் என 25 ஆயிரத்து 302 பள்ளிகளுக்கு தலா 2 ஆயிரத்து 500 வீதம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடும் வகையில் ரூ.14 கோடியே 93 லட்சத்து 97 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்திட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரத்து 576 அரசு பள்ளிகளில் அதிகபட்சமாக 2 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் 50 பள்ளிகளிலும், 100 மாணவர்களுக்குக் குறைவாக 25 ஆயிரத்து 302 பள்ளிகளிலும் படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 24 ஆயிரத்து 350 தொடக்கப் பள்ளிகளில், 21 ஆயிரத்து 780 பள்ளிகளில் நூற்றுக்குக் குறைவான மாணவர்கள் படித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேலோ இந்தியா: வரலாற்றில் தடம் பதித்த தமிழக வீரர், வீராங்கனைகள்..! 2வது இடம் பிடித்து சாதனை!