சென்னை:ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு விதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முடிந்திருந்தாலும், ஜூன் மாதம் முதல் வாரம் வரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை 2024-2025ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே நடத்தி முடிப்பது மாணவர்களுக்கு கற்றல் - கற்பித்தல் பணிகளில் எந்தவிதமான இடையூறும் இன்றி அமையும். மாறுதல் பெறும் ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை தங்களது புதிய பணியிடத்திற்கு அருகாமை பள்ளிகளில் சேர்ப்பது உள்ளிட்டவற்றிற்கும் உகந்தது.
2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு தொடர்பான ஆயத்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடத்திடவும், பொது மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொண்டு மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட உடன், பணி விடுப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஆசிரியர்கள் மே 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மாறுதல் விண்ணப்பத்தின் அடிப்படையில் இறுதி முன்னுரிமைப் பட்டியல் மே 23ஆம் தேதி வெளியிடப்படும். தொடக்கக்கல்வித்துறையில் மலை சுழற்சி கலந்தாய்வு மே 24ஆம் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மே 25ஆம் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு மே 27ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு மே 28ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மே 29ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு மே 30ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும். தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு? கூடுமா? குறையுமா?