சென்னை:இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே நலத்திட்டப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமைச் செயலர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான நலத்திட்டப் பொருட்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து மே 31ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் தாங்கள் கண்காணிக்கும் மாவட்டங்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள நலத்திட்டங்கள் மாணவர்களின் எண்ணுக்கேற்றவாறு பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நலத்திட்டங்கள் விநியோக மையங்கள், பள்ளிகளில் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளைப் பார்வையிடச் செல்லும் பொழுது நலத்திட்டப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும், EMISஇல் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பெறப்பட்ட தேவைப்பட்டியலின் அடிப்படையில் நலத்திட்டப் பொருட்கள் பெறப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விநியோக மையத்திலிருந்து பள்ளிகளுக்கு நலத்திட்டப் பொருட்கள் சென்று சேர்வதை கண்காணிக்க வேண்டும்.
நலத்திட்டப் பொருட்கள் வழங்குவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பயன்படுத்தாமல் பள்ளிகளுக்கு விநியோக மையங்களிலிருந்து நேரிடையாக அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். நலத்திட்டப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்குகின்ற நாளன்று அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.