தேனி: போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குப்பட்ட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியான ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி, கருமத்துப்பட்டி ஆகிய பகுதிகள் வெறிபிடித்த தெருநாய் சுற்றுத் திரிவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்ததாகவும், அதில், 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, அந்த நாய் பள்ளி சிறுமி அழகுதேவியை காலிலும், காளியம்மாள் என்ற மூதாட்டியின் கை மற்றும் கால்களிலும் கடித்துக் குதறியதுடன், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சுருளி(50) என்ற முதியவரின் காலிலும் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைவரும் அப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் வெறிநாய் கடிக்குச் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சாலையில் சென்று கொண்டிருந்த தீபக் என்ற பள்ளிச் சிறுவனை இடது பக்க மார்புப் பகுதியில் கடித்துள்ளது. அதில், காயமடைந்த சிறுவன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.