தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் டெங்குவால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு.. பஞ்சாயத்து நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு! - Boy Dies Of Dengue In Tirupathur - BOY DIES OF DENGUE IN TIRUPATHUR

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், குப்பைக் கழிவுகளை பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை செய்யத் தவறியதாலே இது போன்ற சோகச் சம்பவம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 1:14 PM IST

திருப்பத்தூர்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில், திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் உதயகுமார் - மணிமேகலை தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் கவியரசு என்ற மகனும், 7 வயதில் சொல்மதி என்ற மகளும் இருந்தனர்.

இதில், தனியார் பள்ளி ஒன்றில் கவியரசு 5ஆம் வகுப்பும், சொல்மதி 2ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த செப்.17ஆம் தேதி கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கவியரசின் பெற்றோர், அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு கவியரசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கவியரசை, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க:திருச்சி துறையூர் தனியார் உணவகத்தில் சத்துணவு முட்டைகள்.. உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை!

இத்தகைய சூழ்நிலையில், நேற்று இரவு (செப்.18) சிகிச்சை பலனின்றி கவியரசு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பம் பொம்மிக்குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பொம்மிகுப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை செய்யாமல், குப்பைக் கழிவுகளை தேக்கி வைத்ததாலே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உயிரிழந்துள்ளார். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் பரணிதரன் கூறிய தகவலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 66 பேருக்கு காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details