தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்றம்! - Sc Stay on I Periyasamy case

By PTI

Published : Apr 8, 2024, 5:27 PM IST

I. Periyasamy: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி :அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக வீட்டுவசதி வாரிய வீட்டை ஒதுக்கியதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஐ.பெரியசாமிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்தாண்டு ஐ.பெரியசாமியை விடுவித்து எம்பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் ஜூலை மாதத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், மாா்ச் 28ஆம் தேதி அமைச்சா் ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அமைச்சா் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் தனது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று (ஏப்.8) அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜ்ராகி வாதாடினார். வாதங்களை கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழ் நீதிமன்றத்தின் விசாரணையையும் ஒத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க :ஐ. பெரியசாமி வழக்கு; லஞ்ச ஒழிப்பு காவல்துறை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! - I Periyasamy Case

ABOUT THE AUTHOR

...view details