புதுடெல்லி:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்ப அழைக்குமாறு குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்பை மீறியதாக வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் முன் வைத்த வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, "சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விஷயங்களை நாங்கள் ஏற்கனவே ஆராய்ந்து வருகிறோம்..." என்று வழக்கறிஞர் ஜெயா சுகினிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுதாரரான சுகின் வாதிடுகையில், தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பை மீறியதாக கூறினார். ஜெயா சுகினின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, "அவரால் முடியாது..." என்று கூறியது. "எங்கெல்லாம் ஒரு பிரச்னை இருப்பதாக நாங்கள் கண்டறிந்தோமோ, அங்கெல்லாம் நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், மேலும் இந்த விவகாரம் நிலுவையில் உள்ளது....நீங்கள் முன் வைத்த இந்த வேண்டுகோள் (ஆளுநரை திரும்ப அழைக்க வழிகாட்டுதல் கோருதல்) சாத்தியமில்லை. அதை நாங்கள் வழங்க முடியாது. அரசியலமைப்பிற்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள்..." என்று தலைமை நீதிபதி கூறினார்.