சென்னை:பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், அவரை மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, கஞ்சா வைத்திருந்ததாகவும், பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தேனி காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை, திருச்சி என மொத்தம் ஏழு வழக்குகள் அவர் மீது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டுள்ளது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மீது இத்தனை வழக்குகள் இருக்கும் நிலையில், அவரது மனைவியும், வழக்கறிஞருமான நிலவு மொழி என்பவர் ''எக்ஸ்'' வலைத்தளத்தில் சவுக்கு சங்கரை குறித்து பல விஷயங்களை பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டாலும் தற்போதும் சட்டப்படி தான் தான் அவரது மனைவி என நிலவு மொழி குறிப்பிட்டுள்ளார்.
''ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள நிலவு மொழி, தனது மகனுக்கு மாதம் 2 ஆயிரம் தரமாட்டேன் என்று நீதிமன்றம் சென்ற சங்கர், வேறொரு பெண்ணுக்கு 1 கோடி ரூபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக'' விமர்சித்துள்ளார்.
சவுக்கு சங்கர் மனைவி நிலவு மொழியின் பதிவு;
''ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். (தனியார் நாளிதழில்) வந்த 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது...
இன்னொரு பெண்ணுக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றார். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல லட்சங்கள்...
அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை...