கரூர் :கரூரில் வழக்கு சம்பந்தமாக இன்று மாலை நான்கு மணி அளவில் கோவை சாலையில் உள்ள வழக்கறிஞர் கரிகாலன் அலுவலகத்திற்கு வருகை தந்த யூடியூபர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அதானி குழுமத்தோடு தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் நேரடியாக மின்சாரம் வாங்க தயங்குகின்றன. அப்படி தயங்கும் மாநில அரசுகளை, மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் சிக்கி உள்ளது என்பதை குறிப்பிட்டு தான் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, மின்சாரம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முழுமையாக மறைக்கும் எண்ணத்தோடுதான், அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். இப்படி முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகு, மீண்டும் அதே துறை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறை செல்வதற்கு முன்பு எவ்வாறு கொள்ளையடித்தாரோ அதே வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். மீண்டும் அமைச்சர் பதவி சிறையிலிருந்து வெளியே வந்த மூன்றே தினங்களில் அதே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.