கோயம்புத்தூர்: பெண் காவலர்கள் உள்படத் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் மீது சிறைத்துறை போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் அவரை மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்த அனுமதி வேண்டும் எனவும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சவுக்கு சங்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
சவுக்கு சங்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (மே.09) போலிசார் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் மீண்டும் கோவை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று (மே.09) கோவை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதற்கு, சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி, அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது கையில் மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது என்றார்.