சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86%, நாமக்கல் தொகுதியில்57.67%, வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47 சதவீதம் வாக்குபதிவு பதிவாகி உள்ளது. அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் 45.43 சதவீதமும் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது.
1950 என்ற எண்ணிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டால் சட்டமன்ற தொகுதி வாரியாக உள்ள வாகனங்கள் மூலம் வாக்களிக்க அழைத்து செல்வார்கள். இருப்பினும் 2 கி.மீ குறைவான தொலைவில் தான் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தான் வாக்களிக்க முடியும். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் வெயில் தாக்கம் இப்போது குறைவாக இருப்பதால் அதிகளவில் வாக்காளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் சென்னையில் வாக்கு சதவீதம் மாலை நேரத்தில் அதிகரிக்கலாம், வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'அரசியல் சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்' - ஓட்டுப் போட்டப் பின் கனிமொழி பேச்சு - Lok Sabha Election 2024