சென்னை:குன்றத்தூரில் பிடிபட்ட 1425 கிலோ தங்கம் குறித்து, முறையான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் கொடுத்ததால், அவை விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து குன்றத்தூர் சென்ற ஒரு வேனை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1425 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து விமானம் மூலம் ரூ.950 கோடி மதிப்பிலான 1425 கிலோ தங்கம் முறையான ஆவணங்களுடன் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பிரிங்க்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், தங்கத்தைப் பெரிய அளவில் வாங்கி சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்து வருகிறது. சரியான ஆவணங்களை அவர்கள் வைத்திருந்ததாதல், பிடிபட்ட ரூ.950 கோடி மதிப்புள்ள 1425 கிலோ தங்கம் அந்த நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 66 ஆயிரத்து 461 பேரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, 40 ஆயிரத்து 971 மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது, இந்த பணி 18 ம் தேதி வரை நீடிக்கும்.
தமிழகத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகை, பரிசுப் பொருட்கள் என 1284.46 கோடி இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிடிபட்ட ரூ.950 கோடி தங்கமும் அடங்கும். முறையான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் கொடுத்ததால் அவை திரும்ப வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவித்தார்.
இதையும் படிங்க: '12D படிவம்' அளித்து வாக்கு செலுத்தாதவர்கள் வாக்குச் சாவடியில் ஓட்டு போட முடியாது: ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்! - Lok Sabha Election 2024