சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது வரை 6 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், இறுதியான 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரத சாகு, "தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும்.