ஈரோடு:தாய் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிர்வாழும் அனைத்துக்குமே முக்கியமானதுதான். அந்த தாயை இழந்த குட்டி யானை ஒன்றை அதன் கூட்டம் வாரி அணைத்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் பண்ணாரியில் நிகழ்ந்துள்ளது. வனத்துறை வசம் இருக்கும் யானைக் குட்டி ஒன்றை, தாய் அல்லாத மற்ற யானைகளுடன் சேர்ப்பது இதுவே முதல் நிகழ்வு என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் வனத்துறை அலுவலர்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் கீழே விழுந்தது தாய் யானை ஒன்று. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் சதாசிவம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், கோவை மண்டல வனத்துறை மருத்துவர் சுகுமார், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் விஜயராகவன், மேகமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் கலைவாணன் ஆகியோர் அடங்கிய குழு தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர்,
ஆனால் உடல்நலம் குன்றிய யானைக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. 3 வயதான ஆண் யானை மற்றும் பிறந்து சிலமாதங்களே ஆன பெண் யானை என இரண்டும் திக்கற்று கூட்டத்துடனும் சேர முடியாமல் தாயுடனும் இருக்க முடியாமல் தவித்தன. சற்றே வளர்ந்த ஆண் யானையை விரட்டி கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி வெற்றியடைந்தது. ஆனால் பெண் குடடி யானை தாயை விட்டு பிரிய மறுத்தது, வனத்துறையினர் ஒரு குழிபறித்து அதனுள் குட்டியை தனிமைப்படுத்தினர். தாய் குணமடைந்த உடன் அதனுடன் சேர்ப்பது தான் திட்டம். ஆனால் தாய் யானை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது தான் சோகம்.
இதனையடுத்து தாயை இழந்து நின்ற அந்த பெண் குட்டியானையை வனத்துறையே முகாமில் வளர்ப்பதா? அல்லது கூட்டத்துடன் சேர்ப்பதா? அப்படி சேர்த்தால் தாய் இல்லாத கூட்டத்தில் யானையால் சேர முடியுமா? என ஏராளமான கேள்விகள். இருப்பினும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திப்பார்ப்பது என முடிவு செய்த வனத்துறையினர், முன்னெப்போதும் செய்திராத பணியை செய்யத் துணிந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் கூறுகையில், " உயிரிழந்த பெண் யானைக்கு எங்கள் வசம் இருந்த 2 மாத குட்டி மட்டுமல்லாது, 3 வயதில் மற்றொரு குட்டியும் இருந்தது. அந்த சகோதரன் இருக்கும் கூட்டத்துடன் குட்டியை சேர்ப்பது தான் எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார். வனத்துறை யானைக் கூட்டத்தினருகே குட்டியை கொண்டு சென்ற போது, அதே கூட்டத்தைச் சேர்ந்த பெண் யானை ஒன்று குட்டியை வாரி அணைத்து அழைத்துச் சென்றது.