தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் (AICCTU) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 4 மண்டலங்களிலும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி தூய்மை பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தற்போது போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறியதாவது, "மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு ரூ.725, ஓட்டுநருக்கு ரூ.763 வழங்க வேண்டும். PF, ESI போன்றவற்றை தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அறிவிப்பு இல்லாமல் பண பிடித்தம் செய்வதைக் கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி ஓட்டுநர்களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மரணமடைந்தால் சட்டப்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஓட்டுநர்களைப் பழிவாங்கும் மண்டல மாறுதல் உத்தரவினை கைவிட வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்று வருகின்றது" என்றனர்.