தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாம்சங் ஊழியர்களுக்கு எச்சரிக்கை: அடையாள அட்டை, தீபாவளி போனஸ் கிடைக்காது? - Samsung employees protest - SAMSUNG EMPLOYEES PROTEST

Samsung Show Cause Notice: எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 16ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவரும் சாம்சங் ஊழியர்களுக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து, 'காரணம் கேட்புக் குறிப்பாணை'-யை (Show Cause Notice) வழங்கியுள்ளது.

Samsung employees protest
சாம்சங் ஊழியர்கள் போராட்டம். (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 11:03 AM IST

காஞ்சிபுரம்:அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளி போனஸ் பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16ஆவது நாளாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மின்னணு வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 5,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 1,500 பேர் நிரந்தர பணியாளர்களாக இருந்து வருகின்றனர்.

விளக்கம் கேட்கும் சாம்சங்:

ஊதிய உயர்வு 8 மணி நேர வேலை, சிஐடியு (CITU) தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 16-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்சங் நிர்வாகம் சார்பில், சட்டவிரோத வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு 'காரணம் கேட்புக் குறிப்பாணை'-யை (Show Cause Notice) வழங்கியுள்ளது.

போராட்டக் களத்தில் சாம்சங் ஊழியர்கள். (ETV Bharat)

அதில், இன்னும் 4 நாள்களில் வேலைக்கு வரவில்லை என்றால், 7 நாள்களுக்குள் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைக்கு வர இருப்பவரை தடுத்து நிறுத்தி போராட்டத்திற்கு அழைத்து சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், பணிக்கு ஊழியர்கள் திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளி பரிசு வழங்கப்படாது, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு போனஸ் தொகை பிடித்தம் செய்து வழங்கப்படும் என்றும் இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

வேலை செய்தால் ஊதியம்:

போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு சாம்சங் அளித்த குறிப்பாணையில், ‘வேலை செய்தால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சில ஊழியர்கள் வேலைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. எனினும், எத்தனை ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

சோர்வுடன் போராட்டக் களத்தில் சாம்சங் ஊழியர்கள். (ETV Bharat)

சாம்சங் தரப்பில், “பெரிய விளைவுகளை இந்த போராட்டம் ஏற்படுத்தவில்லை என்றாலும், பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்து செய்யும் கடமை நிறுவனத்திற்கு உள்ளது. அதேவேளை, ஊழியர்களின் தேவைகளுக்கும் நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

  1. இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தோம்; அமேசானின் அதிரடி மொபைல் தள்ளுபடிகள்! - Amazon Mobile Offers
  2. பிளிப்கார்ட்டில் ஆஃபர் மழை: 5ஜி மொபைல் போன் எங்கக்கிட்ட தான் கம்மி; அமேசானுக்கு கடும் நெருக்கடி! - Flipkart offers on mobiles

ABOUT THE AUTHOR

...view details