தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

எஸ்பிஐ ஏடிஎம் மட்டும் டார்கெட் ஏன்? - வடமாநில கொள்ளையர்களிடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக் தகவல்! - namakkal container robbery issue

எப்போதும் பணம் இருக்கும் என்பதால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-ஐ மட்டும் குறிவைத்து கொள்ளையடித்ததாக, கேரளாவில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி, தமிழகத்தில் பிடிபட்ட நபர்கள் கூறியுள்ளதாக, சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர், சேலம் சரக டிஐஜி உமா
பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர், சேலம் சரக டிஐஜி உமா (Credits - ETV Bharat Tamil Nadu)

நாமக்கல் :கேரளாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்-இல் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கண்டெய்னர் லாரி மூலம் தப்பி தமிழகம் வந்த வட மாநிலத்தவர்களை, தமிழக போலீசார் நாமக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா கூறுகையில், "திருச்சூர் எஸ்பி இன்று காலை 6 மணிக்கு நாமக்கல் எஸ்பிக்கு தகவல் ஒன்றை அளித்தார். திருச்சூரில் 3 ஏடிஎம்-இல் கொள்ளையடிக்கப்பட்டு, அந்த பணம் கிரெட்டா காரில் வருவதாக திருச்சூர் எஸ்பி தகவல் அளித்தார்.

அந்த தகவல் வந்தவுடன் கிரெட்டா காரை மையமாக வைத்து எல்லாப் பகுதிகளிலும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த வாகன தணிக்கைப் பண்ணும் போது அடுத்த 1 மணி நேரத்தில் மீண்டும் ஒரு தகவல் வருகிறது. கிரெட்டா காரானது கண்டெய்னரில் வருவதாக தகவல் வருகிறது.

போலீசார் குமாரபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த கண்டெய்னர் லாரியை விரட்டி பிடிக்க போலீசார் முயற்சி செய்து பின் தொடர்ந்தனர்.

அப்போது லாரியானது சங்ககிரிக்கு சென்றது. சங்ககிரியில் டோல்கேட் இருந்ததால், லாரியானது போன வழியில் திரும்பி வந்தது. இதேபோல் சங்ககிரி ரோட்டினை இரண்டு முறை லாரி சுற்றி விட்டு வெப்படை ரோட்டில் சென்றது.

அங்கு, 2 பைக் மற்றும் காரினை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இந்நிலையில் தான் சன்னியாசிப்பட்டியில் வைத்து போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரியை வெப்படை காவல் நிலையம் அழைத்து வர முயற்சி செய்தோம். கண்டெய்னர் லாரியை டிரைவர் ஜமாலுதீன் ஓட்டி வந்தார். அவருடன் போலீசார் இருந்தனர். கண்டெய்னர் லாரியின் முன்னும், பின்னும் போலீசார் பாதுகாப்பில் லாரி வந்தது.

இதையும் படிங்க :கேரளாவில் கொள்ளை.. தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்.. ஏடிஎம் கொள்ளை கும்பலின் திக் திக் சம்பவம்!

இந்நிலையில் தான் கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் சத்தம் கேட்டது. உடனே, டிரைவரிடம் லாரியை நிறுத்தச் சொல்லி கதவை திறக்க சொன்னோம். கதவை டிரைவர் திறந்தவுடன், உள்ளே இருந்து ப்ளூ கலர் பேக்குடன் ஒருவர் குதித்து தப்பிக்க முயன்றார்.

அவனுடன் டிரைவரும் தப்பிக்க முயன்றார். இவர்களை எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் துரத்தி சென்றனர். செல்லும் வழியில் அருகில் இருந்த ஓடையில் தடுமாறி டிரைவர் மற்றும் எஸ்ஐ விழுந்து விட்டனர். அப்போது டிரைவர் எஸ்ஐயைத் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றார். இதனால் டிரைவரை இன்ஸ்பெக்டர் சுட வேண்டியதாகி விட்டது.

இந்த சத்தம் கேட்டதும், முன்னாடி சென்றவர் திரும்பி பார்க்கும் போது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியைக் காண்பித்து நிற்க சொல்கிறார். அப்போது அவர் பையை கீழே போட்டு விட்டு அருகிலிருந்த கற்களால் அடிக்க முயற்பட்ட போது, அவர் முக்கியமான நபர் என்பதால் அவரையும் இன்ஸ்பெக்டர் இருகால்களிலும் சுட்டுப் பிடிக்க வேண்டியதாகி விட்டது.

இதையும் படிங்க :கேரளாவில் ஏடிஎம் கொள்ளை.. நாமக்கல் எல்லையில் பிடிபட்ட 5 பேரிடம் சேலம் போலீஸ் துருவித் துருவி விசாரணை!

தற்போது கொள்ளையடித்தவர்களை கஸ்டடியில் எடுத்து விட்டோம். இவர்கள் ஏடிஎம்-ஐ மையமாக வைத்து கொள்ளையடிப்பதே நோக்கமாக கொண்டுள்ளனர். பிடிபட்ட 5 பேர் மற்றும் காயமடைந்த ஒருவர் ஆகியோர் ஹரியானா மாநிலத்தில் பல்வால் மற்றும் நூஹ் என்ற இரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அடிபட்ட நபர் கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் தெரிவித்ததாவது, கூகுள் மேப்பில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்-ஐ பார்த்து அதனை மட்டும் குறி வைத்து கொள்ளையடிப்பதாக கூறுகின்றனர். மேலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்-இல் பணம் காலியானதும். உடனே பணம் நிரப்பி விடுவார்கள். அதனால் எஸ்பிஐ ஏடிஎம்-ஐ டார்கெட் செய்வதாக கூறுகின்றனர். மேலும், அடுத்தக்கட்ட விசாரணை செய்த பின்தான் தகவல்கள் வெளி வரும்" என டிஐஜி தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details