சென்னை:பால்வளத்துறையில் விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் என்றும், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், ஆவின் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், பால் வளத்துறையில் உள்ள விதிகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் போன்றவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறிய அவர், பால்வளத்தை அதிகமாக கொள்முதல் செய்தால் எப்படி கையாள்வீர்கள் என்று கேட்பதாகவும் கூறினார். தற்போது 18 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதேபோல், பால் உற்பத்தியை மேலும் பெருக்க முடியும் என உத்தரவாதம் அளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் பாலின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அகவிலைப்படி உயர்வை 42 விழுக்காட்டில் இருந்து 46 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், பால் பண்ணை தொழிலில் தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் முதல் முறை தொழில் தொடங்குவோர் ஆகியோருக்கு தேவைப்படும் தகுந்த தொழிற்பயிற்சி, ஆதார நிதி உதவி, வழங்கிட பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் இரு இடங்களில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.