சென்னை:ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 'CIF குளோபல் இந்தியன் விருது 2024' வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் அமைப்பான 'கனடா இந்தியா அறக்கட்டளை' வழங்கி உள்ளது.
மேலும், இதற்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, இந்த விருதுடன் வழங்கப்படும் தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்காக சத்குரு தலைமை ஏற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும், மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதலிலும் ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து கனடா - இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் கூறுகையில், "சத்குரு அவர்கள் இந்த விருதினை பெற ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல், அதனை டொராண்டோவில் நடைபெறும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பது உள்ளபடியே எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம்.
சத்குரு மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும், மண் சிதைவு, காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளையும் வழங்குகிறார். அவரை போன்ற நற்சிந்தனைத் தலைவர்களிடமிருந்து கனடா பெரிதும் பயனடையும்.