மதுரை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், காளையை பிடிப்பதற்கும், காளையை பிடிக்கும் வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் நாளை ஜனவரி 06 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். அதன்படி, நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடிவாசல்:
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள, மந்தையம்மன் கோயில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழா மேடை, பார்வையாளர் மேடை, 1.8 கி.மீ. தூரத்திற்கு தடுப்பு வேலிகள், சோதனை மையம் உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து, வாடிவாசல் பின்புறம் காளைகள் வரிசையாக வந்து செல்வதற்கு ஏதுவாக, திருப்பரங்குன்றம் சாலையில் ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டி போட்டியின் போது குளறுபடி ஏற்படுத்தும் நபர்கள் மீது தடியடி நடத்துவதை தவிர்க்க காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கவசங்களை பொருத்தி பணியாற்ற வேண்டுமென மாநகர காவல் துறையை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாடுபிடி வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்:
- நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை போட்டிகள் நடைபெறும்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேர்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 8-லிருந்து 10 அணிகளாக பிரிக்கப்படும்.
- மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு களத்தில் விளையாடத் தகுதியுள்ள வீரர்கள் மற்றும் காளைகளின் எண்ணிக்கை இறுதிச் செய்யப்படும்.
- ஒவ்வொரு அணியிலும் 75 - 100 வீரர்கள் இடம் பெறுவர்.
- போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான QR கோடுடன் கூடிய அனுமதிசீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
- காளைக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
- ஏறுதழுவும் வீரர்கள் வாடிவாசலிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள எல்லை வரை மட்டுமே, காளையின் திமிலை மட்டும் பிடித்துச் செல்ல வேண்டும். காளையின் வால் மற்றும் கொம்புகளை பிடிக்கக்கூடாது.
- காளையின் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு தழுவும் வீரர், காளை 3 மூன்று சுற்றுகள் சுற்றுதல் அல்லது நடுவர்கள் குறிப்பிடும் குறிப்பிட்ட நிமிடம் வரை திமிலைத் தழுவியிருந்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டில் காயம்படுபவர்களை எப்படி கையாள வேண்டும்...? மதுரையில் செஞ்சிலுவை உறுப்பினர்களுக்கு பயிற்சி!
- கூட்டமாக ஒரு காளையைப் பிடிக்கக்கூடாது, ஒருவர் மட்டுமே திமிலைப் பிடித்துச் செல்ல வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டிக்கு மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை.
- அதேபோன்று காளையின் கால்களை கிட்டி (தங்களது கால்களால் காளையின் கால்களை கட்டுவது) போடக்கூடாது.
- மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட எண் கொண்ட டிஷர்டை மற்றொரு வீரர்கள் அல்லது நண்பர்களுக்கு வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால், அந்த வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
- ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற வீரர் அடுத்தடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவர் அல்லது ஒவ்வொரு சுற்றுகளிலும் வென்ற வீரர் தேர்வு செய்யப்பட்டு இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற வீரர்கள் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவர்.
- கால்நடைத்துறை, மாநகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நடுவர் குழு இதனைக் கண்காணிக்கும். காளைகள், மாடுபிடி வீரர்கள் தேர்வு நடுவர்களின் முடிவே இறுதியானது.
- அரசியல் கட்சியினர் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிட அனுமதி இல்லை .
பரிசுகள்: