சென்னை:சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைs சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகிறார். தமிழகத்தில் போதைப்பொருள் தலை விரித்து ஆடுவதாகவும், அதனுடன் முதல்வர் குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் அவதூறு பரப்புகிறார். விளக்கம் அளித்த பிறகும், தொடர்ந்து அவ்வாறு பேசுவதால் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பது போல பழனிசாமி பேசுகிறார். அதிமுக ஆட்சியில் 2013-இல் ஜாபர் சாதிக் மீது தொடரப்பட்ட வழக்கில் 2017ல் எடப்பாடி முதல்வராக இருந்தபோது ஜாபர் சாதிக் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி நியமித்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன்தான்.
அவர் வழக்கை திசை திருப்பி, ஒழுங்காக நடத்தாமல் போனதால் ஜாபர் சாதிக் விடுதலையானார். அதன் காரணமாக, அந்த வழக்கறிஞர் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக்கிற்காக ஆஜரானவர் இன்று பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பால் கனகராஜ்.
ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நல்ல நம்பிக்கையினாலும், கருத்துக்கணிப்பு திமுகவிற்கு ஆதரவாக வருவதாலும் திட்டமிட்டு மக்கள் கவனத்தை திசைதிருப்ப எடப்பாடி முயற்சிக்கிறார். பாஜக ஆளும் குஜராத்தில் உள்ள அதானியின் துறைமுகத்தில் இருந்துதான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் வருகிறது. குஜராத்தில்தான் எடப்பாடி பழனிசாமி மனிதச் சங்கிலி நடத்தி இருக்க வேண்டும்.
என்.ஐ.ஏ போன்ற பெரிய அமைப்புகளை வைத்திருக்கும் மத்திய அரசாங்கத்தையே ஏமாற்றியதை போல, ஜாபர் சாதிக் திமுகவையும் ஏமாற்றியுள்ளர். அவர் திமுகவில் வகித்தது பெரிய பொறுப்பு அல்ல, ஒரு அணியில் இருந்த 3, 4 துணை செயலாளர்களில் அவரும் ஒருவர். செயலாளர்களுக்குத்தான் திமுகவில் அதிகாரம் உண்டு. உளவுத்துறை, காவல்துறை போல நாங்களும் ஜாபர் சாதிக்கால் ஏமாற்றப்பட்டு விட்டோம்.
உளவுத்துறை, மத்திய அரசையே ஏமாற்றும் ஒருவன், ஆஃப்ட்ரால் எங்களை ஏமாற்ற முடியாதா? திமுகவில் அணி பொறுப்பாளர்களை முதல்வரோ, உதயநிதியோ தேர்வு செய்து நியமிப்பதில்லை. மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப்படிதான் நியமனம் செய்யப்படுகின்றனர். அது ஒன்றும் பெரிய பதவி இல்லை, துணை அமைப்பாளர் பதவிதான். அது பத்தோடு பதினொன்று.
எடப்பாடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஒருவர், மடாதிபதியை மிரட்டி பணம் கேட்டுள்ளார், எடப்பாடி அனுப்பி கேட்டார் என நான் கூற முடியுமா? புகைப்படம் இருப்பதால் அவருக்கும், திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது தவறு. அரசியலில் சிலர் புகைப்படத்தில் தங்கள் படம் வர வேண்டும் என்பதால் தலைவர்கள் அருகே வந்து நிற்பார்கள்.
12 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரை அமித்ஷா பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய கர்ப்பிணியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது 3 வயது மகளை கொன்ற நபர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பாஜக தலைவர்கள் மாலையிட்டு வரவேற்பு அளித்தனர். இதையெல்லாம் மறந்து விட்டு, எங்களை பழனிசாமி விமர்சிப்பது பாஜகவின் அடிமையாகத்தான் எடப்பாடி இன்னும் இருக்கிறார் என்று தெரிகிறது. திமுக எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தையே நம்பும்.