சென்னை:சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை (Armstrong Murder Case) செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 11 நபர்களையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாதவரம் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றவாளிகள் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்று அதனைப் பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை போலீசார் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது முள்புதர்கள் நிறைந்த அந்த பகுதியில் அழைத்துச் சென்றபோது திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரைத் தாக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.ரவுடி திருவேங்கடத்தை நோக்கி இரண்டு ரவுண்ட்கள் போலீசார் சுட்டுள்ளனர்.