ரோஜா கண்காட்சிக்கான முன்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் இதமான கோடை சீசன் காலநிலையை ரசிப்பதற்கென்று உலகளவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த காலக்கட்டத்தில் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவது வழக்கம்.
நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் முழுவதும் இந்தக் கண்காட்சிகள் மக்கள் ஆரவாரத்துடன் களைகட்டும். தாவரவியல் பூங்காவின் மலர் கண்காட்சியில் தொடங்கி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, கூடலூர் பகுதியில் வாசனை திரவிய கண்காட்சி போன்ற பல கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கோடை விழாவைக் காண உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவர். இதனால் மற்ற மாதங்களை காட்டிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி சுற்றுலாப் பயணிகளின் வெள்ளத்தில் திளைத்திருக்கும்.
அந்த வகையில் இந்தாண்டிற்கான 19வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்மரமாக தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள 32ஆயிரம் ரோஜா செடிகளில், 4ஆயிரத்து 200 ரகங்களை கொண்ட ரோஜா வகைகளின் கவாத்து மேற்கொள்ளும் பணிகள் இன்று (பிப். 5) நடைபெற்றது.
இந்தப் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் பூங்கா ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்போது கவாத்துப் பணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வரையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும்.
அவ்வாறு பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், நடைபாதை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாகவும், பூங்கா புது பொலிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி! தடுக்க டிப்ஸ் இதோ!